இந்தியா வந்த “ஆரிய இனம்”

Saturday, May 1, 2010

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (1)

 

ஆரிய இனம்

"வானியல் நோக்கில் வள்ளுவராண்டு" என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட "தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கி நகர்வும்" என்ற கட்டுரையையோ கவனத்துடன் படிக்கவில்லை என்று புரிகிறது.

 

தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை.

 

இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து "ஆரிய இனம்" என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே "தூய" ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன் பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த "திராவிடர்களை" (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட"திராவிடர்களை" வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு "ஆரியர்களான" பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது.

 

"ஆரிய இனம்" இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது.

 

தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது.

மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும்.

 

ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும்.

 

இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும்.

மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது.

 

உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் "வழக்குரை காதை"யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு "அறுவர்க்கிளைய நங்கை"யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு "ஏழு மாதரில் இளையவளான பிடாரி" என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

 

பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை "துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி" (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே "வேட்டுவ வரி"யில் கூறுகிறது.

 

குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம்.

 

ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP