பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்!

Saturday, May 1, 2010

கோவையில் எனக்குத் தெரிந்த துன்பர் (அன்பர் என்பதன் எழுத்துப்பிழை அல்ல) ஒருவர் இருக்கிறார். ரொம்ப சாந்த சொரூபியான முகம், பகவான் ரஜனீஷின் ஓன் பிரதர் போல சுய எண்ணம், அவரைப்போலவே தாடி, தொப்பை என்று அடையாளங்கள். ரயில்வேயிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஆசாமி. பெயர் வேண்டாம். துன்பர் வருத்தப்படுவார்.

பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பதிப்பகத்தின் வேலைகளைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது அலுவலகத்துக்கு வருவார். பெரும்பாலும் அது மதிய நேரமாகவே இருக்கும். இதனால் ஏதாவதோர் ஓட்டலில் ஃபுல் மீல்ஸ் கட்டிவிட்டு நேராக வந்துவிடுவார். என்னிடம் சமர்ப்பிக்க வேண்டியவைகளை சமர்ப்பித்துவிட்டு நான் கணினியில் வேலையை ஆரம்பித்ததும் முன்னால் உள்ள இருக்கையில் தன் தியானத்தை ஆரம்பித்து விடுவார். உலகத்திலேயே தியானம் செய்யும்போது குறட்டை விடும் ஒரே தவஞானி அவர்தான். அவரது குறட்டையொலி வேலையைக் கெடுக்க ஆரம்பிக்கும்போது பேப்பர் வெயிட்டை எடுத்து அந்த ஆட்டுமண்டை மீது வீசவேண்டும் என்கிற ஆவலை அடக்கிக்கொண்டு, தடால் புடால் என்று எழுந்துகொள்வதோ, சப்தமெழுப்பக்கூடிய ஒன்றைக் கீழே போடுவதோ ஓரளவு பயனைத் தரும். அடிக்கடி புனேக்குப் போய்வருகிற பழக்கத்தையும் அப்போது அவர் கொண்டிருந்தார். அமிர்த யாத்ரிகன் என்கிற பொருள்படும் பெயரும் அவருக்கு ஓஷோவின் ஆசிரமத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.

உலகத்திலேயே உண்மையான சமத்துவம் பேணப்படும் ஒரே இடம் ஓஷோ ஆசிரமம்தான் என்பதைத் தன்னை அறிந்தவர்களுக்கெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டே அவரது யாத்திரை நிகழ்ந்துகொண்டிருந்தது. எவன் வேண்டுமானாலும் அங்கே போய் தீட்சை பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு ஓஷோவுக்குப் பிறகு அங்கே சமரசம் நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் இருந்த காலத்தில் இவரைப் போன்ற ஒருவர் உள்ளே போயிருந்தால் உதைத்தே அனுப்பியிருப்பார்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் வாய்ந்த துன்பர் ஒருநாள் அற்புதம் ஒன்றை நிகழ்த்திக்காட்டினார். சிறிது காலமாக, தான் ப்ரானிக் ஹீலிங் என்கிற ரெய்கி வைத்திய முறையைக் கற்று வருவதாகச் சொல்லி தன் பராக்கிரமத்தை என் உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார். அதாவது, என் இடது உள்ளங்கையை விரித்தபடி நீட்டச் சொன்னார். நானும் இந்த டுபாக்கூர் என்னத்தைப் பெரிதாய்க் கிழித்துவிடப்போகிறது என்கிற தைரியத்தில் கையை நீட்டித் தொலைத்தேன். தன் உள்ளங்கைகளைச் சற்று பரபரவென்று தேய்த்துவிட்டு கிட்டத்தட்ட ஐந்தடி தூரத்தில் தன் வலது உள்ளங்கையை என் இடது உள்ளங்கையைப் பார்க்குமாறு நீட்டினார் அவர். எனது இடது உள்ளங்கையில் எர்த் அடித்ததுபோல சிறு ஷாக்கை உணர்ந்தேன். பதறிப்போய் கையை உதறினேன். துன்பர் மூஞ்சியில்தான் என்னே ஒரு புஞ்சிரி!

சரி, இப்போது எதற்கு இந்த சம்பவம் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. சிறிது காலம் கழித்து ஓர் இளம் துறவியின் பெருமைகளைப் பேண ஆரம்பித்தது துன்பரை அடிக்கடி என்மீது ஏவிவிடும் அந்த வாடிக்கையாள நிறுவனம். பெயர் வேண்டாம். நிறுவனம் வருந்தும்.

அந்தத் துறவியின் சில புகைப்படங்களை என்வசம் காட்டி அவருக்கு ஒரு சிறு புரோஷர் டிசைன் செய்ய வேண்டும் என்பதாக அது கேட்டுக்கொண்டது. திருவண்ணாமலையின் பின்னணியில் சில படங்கள் காணப்பட்டன. ஹடயோகி போல ஆசனங்களில் காணப்பட்டார் இளம் துறவி. புகைப்படங்களிலிருந்து அவர் ஒரு பாலயோகி என்பது நன்றாகவே தெரிந்தது. பாலயோகிக்கு கர்னாடகத்தில் ஆசிரமம் அமைக்க யாரோ கொடுத்திருந்த இடத்தின் படங்களும் அதில் இருந்தன. அந்த இடம் வெறும் பொட்டலாக இருந்ததாகவும் ஏதோவொரு மரத்தின் புகைப்படம் மட்டும் அவற்றில் திரும்பத் திரும்ப இடம் பெற்றதாகவும் ஞாபகம்.

எந்தக் காரணத்தாலோ அந்த வேலையை நான் செய்துகொடுக்கவில்லை. அதோடு அவர் எனது வாடிக்கையாளரைக் காட்டிலும் பெரிய மனிதர்களின் கண்களில் பட்டு இப்போது மேலும் புகழ்பரவத் தொடங்கியிருந்தார் என்பதை மட்டும் நான் அவ்வப்போது கவனித்து வந்தேன். ரிஷிகேசத்தின் மூலரான சிவானந்தர் முதலான யோகிகள் பிறந்த இந்தத் தமிழ் பூமியில் இவ்விதமான பாலயோகிகள் பிறப்பதும் பிராபல்யம் பெறுவதும் உவப்பான செய்திகள்தானே!

(இருந்தாலும் எனக்கு இந்த பால யோகிகளைப் பார்த்தாலே பங்காளியைப் பார்த்ததைப் போல பற்றிக்கொண்டு வரும். இவருக்கு யோகி என்கிற புகழாவது இருக்கிறது. அதை வைத்துக்கொண்டாவது தீண்டுவதற்குப் பெண்களே கிடைக்காத கழிவிரக்கத்தைத் துடைத்துக்கொள்ளலாம். எனக்கு அதற்குக்கூட வழியில்லையே என்பதே அடிப்படை ஆதங்கம்!)

அதன்பிறகு லக்ஷக்கணக்கில் விற்பனையாகும் ஒரு தமிழ் வாரப்பத்திரிகை பாலயோகியைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்க ஆரம்பித்தது. அவர் எழுதியதாக மற்றவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளை அது தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தது. இதனால் அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தது. அந்த வாரப்பத்திரிகை சார்ந்த ஒரு முக்கிய நபருக்கு இருந்த உடற்கோளாறை பாலயோகி தன் சக்தியால் தீர்த்து வைத்ததால்தான் இந்த தண்டோரா வைபவம் என்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. ஏனென்றால் அந்த வாரப்பத்திரிகை இப்படி வேறு யாரையும் அதுவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதேயில்லை என்பதே பதிவு.

அந்தப் பத்திரிகையில் வரும் அவரது தொடரை வேகமாகத் தாண்டிப் போய்விடுவது எனது இயல்பு. பொறாமையால் அல்ல. அதுவே எனது இயல்பு. அவரது கட்டுரை என்பதல்ல, வாரப்பத்திரிகைகள் வெளியிடும் எந்தத் துறவியின் கட்டுரைகளையும் வாசிப்பது எனக்கு வழக்கமில்லை. அதோடு மீசையில்லாதவோர் ஆணின் முகத்தைப் பதித்திருக்கும் அந்தப் பக்கங்களில் பார்க்கவும்கூட என்ன இருக்கிறது? பெண்கள் பக்கம் என்றாலாவது பேணிப் பாதுகாக்கலாம்!

இதற்குள் பாலயோகி கிருஷ்ணாவதாரமே எடுத்துவிட்டார் என்பதை அவ்வப்போது யாராவது சொல்லக் கேட்க நேரும்போது ஆச்சர்யமாக இருக்கும். அட எழுத வருகிறது என்பதற்காகக் குடிப்பதைப்பற்றி நாவல் எழுதியதற்கு பதிலாக யோகம் பயின்று மானுடம் உய்யவாவது எதையாவது எழுதிக்கொடுத்திருக்கலாமே என்று வருத்தமாகவும் இருக்கும். ஏனென்றால் முன்னேறாதவர்கள் சுயமுன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள் ஆன்மிகத்திலும் மட்டுமே நாட்டம் செலுத்தும் யுகம் இது. இதில் இலக்கியவாதிக்கு என்ன வேலை இருக்கிறது!

பாலயோகி பெரும் விஐபிகளைக் கவர ஆரம்பித்திருந்தபோது எழுத்தாளர் சாருநிவேதிதா அவரைப்பற்றி பேச ஆரம்பத்ததைத் கேட்டேன். சாருவிற்கு ஷீரடி சாய்பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் வந்ததைப் பற்றி தன் பைபாஸ் சர்ஜரி காலத்தை நினைவுகூர்ந்து அவர் எழுதியிருப்பவையும் என்னிடம் நேரிலேயே சொன்னவையும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கின்றன. இறந்தவர்களை நேரில் பார்க்கவோ தெய்வத்தின் அருகாமையை உணரவோ எல்லோருக்குமா வாய்க்கிறது! சாரு அதை உணர்ந்ததாக சொன்னபோது என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. ஏனென்றால் அவர் பொய் பேசுவதில்லை. தனக்கு சரி என்று பட்டதை மற்றவர்களிடம் அவர் சொல்லும்போது அவர்கள் அதை புருடா என்று நினைத்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் சொல்கிற விஷயங்கள் சாமான்யர்கள் அனுபவித்திராதவையாக இருக்கும். இந்தக் குறிப்பிட்ட நடிகையை முத்தமிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அவர் சொன்னால் அந்த நடிகையை முத்தமிட விரும்பும் அத்தனை பேரும் அவர் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதே அடிப்படையில்தான் கடவுளை உணர்வதும் கவனிக்கப்படவேண்டியதாகிறது.

ஆனாலும் தானாக உணராமல் என்னால் எதையும் நம்ப முடிவதில்லை. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே எனக்கு atheist என்கிற பதம் பொருந்திப்போகலாம். ஆனால் நான் ஒரு உண்மையான ஆன்மிகவாதி என்பதே உண்மை. ஆன்மிகத்தையும் மதத்தையும் கலந்து பார்க்கிற சமூகத்திலிருந்து நான் எப்போதோ விலகிவிட்ட காரணத்தால் இதை உரத்துச் சொல்ல முடிகிறது.

தெய்வத்தை உணரவேண்டுமானால் மதங்களின் வேதங்களை வாசிப்பது முதல் படியாக மட்டுமே இருக்க முடியும். அவை தெய்வத்துக்கும் உங்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களேயன்றி வேறல்ல. அவற்றின் மீது ஏறியும் அப்பால் குதிக்கலாம். அவற்றின் இருப்பைப் புறக்கணிப்பதன் வாயிலாகவும் அவை தானே நகர்ந்து செல்வதை உணரலாம். எப்படி வந்து சேர்ந்தாலும் சேருமிடம் ஒன்றுதான். அது வெற்றிடம். வெளி. உள்ளேயிருக்கிற வெளியை வெளியேயிருக்கும் வெளியோடு ஐக்கியமாக்கிவிட முடிகிற சூத்திரங்களைப் பயின்ற எத்தனையோ தவஞானிகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. இதனால் என்னால் செய்ய முடியாதபோதும் ஒரு தவஞானி தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் சக்தியைப் பார்த்து நான் மயங்குகிறேன்.

இம்மாதிரியான மயக்கங்கள் பல நிலைப்படுகின்றன. சாருநிவேதிதா தன் வாழ்வின் நுண்ணிய பொழுதொன்றில் வேறொரு ஞானியிடம் பெற்ற நம்பிக்கையை இந்த பாலயோகி சுலபமாகக் கவர்ந்துவிட்டார் என்பதாகவே இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே சாரு அவரைப்பற்றி பெரிதும் புகழ்ந்து தள்ளுவது தவிர்க்க இயலாததாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவனின் நம்பிக்கை பொய்த்துப்போகும்போது அவநம்பிக்கை வெள்ளத்தையும் ஒருவர் எதிர்கொண்டேயாகவேண்டும். அதிகமாகவே பாலயோகியை நம்பிய காரணத்தாலேயே அவரைப் பற்றிய அவநம்பிக்கையும் பேரதிகமாகவே பிரவகிக்கிறது. இதை உணராமல் இணையத்தில் பலரும் சாருவை நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படித்தான் ஜெயமோகனை இந்துத்துவா என்று சிலகாலம் பலரும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். இதனால் அவர் இந்துத்துவாவுக்கு எதிராக ஏதாவது எழுதட்டுமே என்பது உள்நோக்கமாக இருந்திருக்கலாம்.

சரி, பாலயோகிக்கும் ப்ரானிக் ஹீலிங்குக்கும் திரும்பவும் வருவோம். தற்போது ஸ்ரீகிருஷ்ணனாக பாவிக்கப்படும் பாலயோகியான நித்யானந்தரை பலரும் தூற்றவும் போற்றவும் அங்கதம் செய்யவுமாக இருக்கும் ஒரு நிலையில்; அரசும் தன் சனநாயக வழக்கப்படி அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது எதிர்ப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற கணக்கீட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; பின்லேடன் போல நித்யானந்தர் எங்கிருந்தோ வீடியோக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் சூழலில் இதை எழுதுகிறேன்.

கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட துன்பருக்கும் நித்யானந்தருக்கும் உள்ள முக்கியமான தொடர்பு ப்ரானிக் ஹீலிங் எனும் வைத்திய முறைதான். வாழ்வில் எந்த ஒழுக்கங்களும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்ந்து, மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் ரயிலில் அலைந்து, வீயாரெஸ் வாங்கி அதன்பிறகு ஓஷோவின் ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்கலாமா என்று ஆரம்பித்து ப்ரானிக் ஹீலிங் எனும் ரெய்கி எனும் உடலின் சக்தியைப் பெருக்கி அதன் வாயிலாக நோய்களைத் தீர்க்கும் உடற்புள்ளிகளைத் தீண்டும் கலையைக் கற்க முயன்று தோற்ற ஒரு துன்பராலேயே தன் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் உணரக்கூடிய வகையில் ஓர் எனர்ஜியை செலுத்த முடியும் என்பது உண்மையானால், நித்யானந்தர் போன்ற பால யோகியின் உடலில் எவ்வளவு எனர்ஜி இருக்கக்கூடும்! அந்த எனர்ஜியைக்கொண்டு அவர் ஒரு ப்ரானிக் ஹீலராக வைத்தியம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அவர் ரஞ்சிதாவோடு கொஞ்சினால் என்ன, அஞ்சிதாவோடு துஞ்சினால் என்ன! யாரால் கேள்வி கேட்க முடியும்?

அதோடு இந்தப் பிரச்சனையை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும், ஆதரிப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும் வைத்து மயங்குவதே பொதுவான குழப்பத்துக்கான மூலம். ஒரு மகானிடம் ஒரு சீடன் பெறும் அனுபவமும் ஒரு பக்தன் பெறும் அனுபவமும் முற்றிலும் வேறானவை. அதேபோலத்தான் ஒரு சீடன் எதிர்கொள்ளும் வெறுப்பும் ஒரு பக்தன் எதிர்கொள்ளும் வெறுப்பும் சமம் என்று கருதுவதும் முட்டாள்தனமாகவே ஆகமுடியும்.

இருந்தாலும் வைத்தியரை கடவுள் என்று கொண்டாடும் சமூகம் அவர் ஓர் ஆன்மிக மகானாகவும் தென்பட்டால் அவரை தேவாதிதேவன் என்று போற்றுவது இயல்பானதே. அந்த இயல்புதான் இந்தப் பிரச்சனையின் உண்மையான பிரச்சனை.

இதில் நித்யானந்தாவின் நியாயம் என்ன?

வெறும் ப்ரானிக் ஹீலராக மட்டுமே இருந்திருந்தால் அவரால் இத்தனை உயரத்துக்குப் போயிருக்க முடியுமா? ஆன்மிகம் கொடுத்த செல்வத்தை அவருக்கு வைத்தியம் கொடுத்திருக்குமா? (நல்லகாலம், இந்த வருடத்தைய உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை).

அதோடு ப்ரானிக் ஹீலிங் என்கிற வைத்திய முறையை இந்திய அரசு அங்கீகரித்துவிட்டதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தனை பெரிய கோபுரத்தை ஒருவரால் ஒரு வைத்தியமுறையை வைத்துக்கொண்டு எழுப்ப முடியும் என்றால் அதன் பலன் என்ன என்பதை ஆராயவேண்டும் என்கிற எண்ணம் ஏன் இந்திய அரசுக்கு எழாமலே போகிறது? எதற்கெடுத்தாலும் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவமுறையின் கொடியையே உயரப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் இந்திய அரசு இந்த நேரத்திலாவது உறக்கம் கலைய வேண்டும். ப்ரானிக் ஹீலிங் போலவே எத்தனையோ மருத்துவ முறைகள் உலகெங்கிலும் பல அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பவையாக இருக்கின்றன. சீனாவில் அக்குபங்சர் வைத்தியமே பிரதானமானது என்பதைப் போலவே இந்தியாவிலும்கூட கேரளாவில் இப்போதும் ஆயுர்வேதத்திற்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏன் இதுமாதிரி சாமியார்கள் இம்மாதிரி நடந்துகொள்கிறார்கள் என்பதன் பின்னணியில் இந்தப் பார்வையும் முக்கியமானது என்பதே எனது பார்வை. ஆங்கில மருத்துவத்துக்கான அங்கீகாரத்தை ஒரு தலைமுறைக்கு ரத்து செய்து பாருங்கள், எத்தனை எம்பிபியெஸ்கள் சாமியார்களாக ஆகிறார்கள் என்பது தெரியும்!

வாழும் மனிதர்களை அவர்கள் நோயைப் போக்குகிறார்கள், ஆன்மிகத் தெளிவு வழங்குகிறார்கள், ஆத்ம அமைதியை அருளுகிறார்கள், சம்பத்தைப் பெருக்கித் தருகிறார்கள் என்கிற காரணங்களுக்காக தெய்வங்களாகப் போற்றுகிற சமூகம் இருக்கிறவரை இந்தக் குழப்பங்கள் எல்லாம் தவிர்க்க இயலாதவையே!

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP