பேய் நடமாட்டம்.

Thursday, May 27, 2010

"என்ன தான் செய்துவிடும்?
உயிரும் உடலும் சேர்ந்த மனிதத்தை!…
நீ நம்பும் ஆவி".

காலை மணி 7.00. எப்போதும் கூட்டம் நிறைந்து நிற்கும் தளவாய்புரம் காவல் நிலையத்தில் இன்று பிரச்சனைகளை சுமந்து நிற்கும் மக்கள் கூட்டத்தைக் காணமுடியவில்லை. மாறாக காவலர்கள் வெளியில் நின்று ஏதோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் பட்…பட்…. என்ற புல்லட் பைக்கின் ஓசை கேட்டு பரபரத்து அவரவர் இடத்திற்கு சென்று நிலைகொண்டார்கள் காவலர்கள்.

மிடுக்காக பைக்கில் இருந்து இறங்கி தன் சிங்கப் பார்வையால் கம்பீரமாக சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டபடி தன் விறுவிறு நடையுடன் காவல் நிலையப்படி ஏறிய படியே "இராஜவேல் இங்க வாங்க", என்று குரல் கொடுத்த எஸ்.ஐ ஆதித்யா முப்பத்து மூன்று வயதைக் கடந்து சில வாரங்கள் தான் இருக்கும். ஐந்தே முக்கால் அடி உயரம். பொதுப்படையான நிறம். துறு துறு கண்கள். ஒட்ட வெட்டிய தலைமுடியில் தான் போலீஸ் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்ட அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக எஸ்.ஐ முன் வந்து நின்றார் இராஜவேல். சுமார் நாற்பதைக்கடக்கும் வயதுடன் இன்னும் தொப்பை சரியாத வயிற்றுடன் கம்பீரமாக இருந்தார். தன் மேலதிகாரி நேர்மையானவர் என்பதால் அவர் மீது அபாரமான மரியாதை வைத்திருப்பவர். அவரது ஓட்டமும் நடையுமான வேகத்திற்குக் காரணம் மேலதிகாரி மீதுள்ள பயம் இல்லை. மாறாக அவர் மீது கொண்டிருந்த மரியாதையே காரணம்.

"அய்யா, சொல்லுங்கய்யா, இராஜவேல் பவ்வியமாக வார்த்தைகளை உதிர்த்தார்.

"என்ன இராஜவேலு ஏதாவது விஷேசமா…வெளிய ஒரு ஆளக்கூட காணல்ல… நம்ம ஆட்கள்கிட்டயும் ஏதோ வித்தியாசமா தெரியுது.

இராஜவேலுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார் எஸ்.ஐ. அவருக்குத் தெரியும் இராஜவேலுவிடம் கேட்டால் தான் ஒளிவு மறைவற்ற உண்மை கிடைக்கும் என்று. எதையும் கூட்டிக் குறைத்துக் கூறமாட்டார். ஆனால் இடம் பொருள் பாரத்து பக்குவமாக உள்ளதை உள்ளபடி பேசுவார். எல்லோரின் நலம் விரும்பி. காசுக்காக எதையும் செய்ய மாட்டார். காரியம் செய்த பின் யாரும் விரும்பி கொடுக்கும் பணத்தையும் வேண்டாம் என்று மறுக்க மாட்டார். யாரிடமும் வாய் திறந்து பணம் கேட்கவும் மாட்டார். எதார்த்த வாதி. அதனாலேயே எஸ்.ஐ-க்கும் அவரை நிரம்பவே பிடிக்கும்.

அய்யா, நேத்து ராத்திரி நம்ம மலை பிள்ளையார் கோவில் அடிவாரத்துல இருக்குற சுடுகாட்டு பக்கமா ரோட்டுல போய்ட்டு இருந்த மேலத்தெரு பெரிய சாமியை பேய் அடிச்சு இறந்துபோனான். காலைல தான் ரோட்டுப்பக்கமா போன ஆட்கள் பார்த்துட்டு வந்து தகவல் சொன்னாங்க. நம்ம பெரிய ஏட்டு இராமச்சந்திரனும் இப்ப அங்கதான் போயிருக்காரு. வீ.ஏ.வும் பார்த்துட்டு வந்து கம்ப்ளைண்ட் தர்ரதா சொல்லிட்டுப் போயிருக்காரு. அதான் ஊர் ஜனங்கள்லாம் அங்க வேடிக்கை பார்க்கப் போயிட்டாங்க. அதப்பத்திதான் நம்ம ஆளுங்களும் பேசிட்டு இருந்தாங்க.

"என்ன இராஜவேலு தமாசு பண்ணுரீங்க…பேயடிச்சு இறந்தான் கீயடிச்சு இறந்தான்னுட்டு…வேடிக்கையா இல்ல இது.

"அய்யா, அப்படில்லாம் சொல்லாதீங்க பேய் பிசாசு எல்லாம் உண்மைதான். நானே அந்த இடத்த கடந்து போகும் போது ஒருமுறை பேயப் பார்த்து இருக்கேன். ஆறு மாதச்த்துக்கு முன்ன நானும் ஏட்டு கலிய பெருமாளும் இராத்திரி ரோந்து போயிட்டு ராத்திரி 12.00 மணிக்கு அந்த இடத்துல வந்துட்டு இருக்கும் போது திடீர்னு எங்க முன்ன ஒரு பனை உயரத்துக்கு பேய் ஒண்ணு புகைமூட்டம் மாதிரி வந்து நின்னுது…"

சொல்லும் போதே மூச்சிரைத்த இராஜவேல் மீண்டும் தொடர்ந்தார்.
"நல்ல வேளையா அந்த நேரம் பார்த்து லாரி ஒண்ணு வந்தது. அத பார்த்துட்டு அந்த பேய் மறைச்சி போயிட்டுது இல்லது அண்ணைக்கே எங்க கதியும் மேலத்தெரு பெரிய சாமி கதிதான். ஆனாலும் கலிய பெருமாள் மூணு மாசம் படுத்தப்படுக்கை ஆகிட்டார். இப்ப கொஞ்ச நாளாத்தான் ஆள் நல்லா இருக்கார்." பரவசத்தோடு சொல்லி முடித்தார் இராஜவேல்.

எஸ்.ஐ ஆதித்தியாவின் இளம் இரத்தம் இராஜவேலு சொன்னவற்றை நம்ப மறுத்தாலும் அவர் சொன்னவற்றை கவனமாக கேட்டு தலையாட்டி வைத்தார்.

சரி அடுத்த காரியத்த பாருங்க இராஜவேலு தலைக்கு மேல வேலையிருக்கு. சொல்லிக் கொண்டே ஆதித்யா தன்முன் மேஜையில் குவிந்திருந்த கேஸ் கட்டுக்களை எடுத்து வாசிக்கலானார்.

இரண்டுவாரம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை. எஸ்.ஐ ஆதித்யாவிற்கு இரவு ரோந்துப் பணி ஒதுக்கியிருந்தார்கள். ஆதித்யா காவல் நிலையத்தில் பேசிக்கொண்ட பேய்க்கதைகள் அத்தனையும் மறந்து விட்டிருந்தார். அன்று இரவு ரோந்திற்கு அவரோடு இராஜவேலுவுக்கும் டூட்டி போட்டு இருந்தார்கள்.

இருவரும் சப்-டிவிசன் எல்லைக்குள் ரோந்து முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 2.00 மணிக்கு காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் மலைப் பிள்ளையார் கோவில் மெர்க்குரி விளக்கை பார்த்த போதே இராஜவேலுவிற்கு வயிற்றை ஏதோ பிசைவது போல உணர ஆரம்பித்தார். கூடவே பிண வாடை வேறு. அனேகமாக அந்த சுடுகாட்டில் தான் பிணம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். வேறு வழியாக காவல் நிலையத்திற்கு போனால் நன்றாக இருக்கும் என்று இராஜவேலுவிற்கு தோன்றியது. ஆனால் அதை எப்படி எஸ்.ஐ-யிடம் சொல்வதென்று மனதிற்குள் தயங்கிக்கொண்டிருக்கும் போதே எஸ்.ஐ-யின் புல்லட் கோவில் அடிவாரத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு சமீபமாக வந்து விட்டது.

"இராஜவேலு பொணம் ஏதும் எரியுதோ?!…", எஸ்.ஐ-ஏ கேட்டார்.

"அய்யா, ஆமங்கையா…பொணம் எரியுற வாடைதான் இது… அதன்பின் நீண்ட மௌனம் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

கீரீச்…. எஸ்.ஐ ஆதித்தியா புல்லட்டை அசுரத்தனமாதக பிரேக்போட்டு நிறுத்தினார். இராஜவேலுவும் ஒரு நிமிடம் பதட்டத்தில் ஆடிப்போனவர் சுதாகரிப்பதற்குள் "இராஜவேலு முன்னப்பாருங்க… பதட்டமாக ஆனால் மிகச் சன்னமாக வார்த்தைகள் வேளிப்பட்டது எஸ்.ஐ ஆதித்தியாவிடம்.

முன்பக்கம் எட்டிப்பார்த்த இராஜவேலு உரைந்தே போனார். அவர் சுமார் ஏட்டு மாதங்களுக்கு முன் இதே இடத்தில்வைத்து பார்த்த அதே உருவம். ஆஜானுபாகுவாக ஒரு பனை உயத்தில் கருகருவென்று வெண்புகை சூழ…. அய்யோ இன்று தொலைந்தோம் யாரும் எஸ்.ஐ ஆதித்யாவையும் தன்னையும் காப்பாற்ற முடியாது. இன்றோடு தொலைந்தோம். அய்யய்யோ பிள்ளை குட்டிகளுக்கு கூட இது வரை ஏதும் சேர்த்து வைக்கவில்லை. நாம இல்லண்ணா எப்படி கஸ்டப்படப்போறாங்களோ…ஏதேதோ எண்ண ஓட்டம் மனதில் ஓட கண்கள் மங்கத்தொடங்கியது…

எஸ்.ஐ ஆதித்யாவிற்கும் மனதிற்குள் லேசான நெருடல். இதே இது மனிதனாக இருந்து எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உண்மையிலேயே இது பேயா இருந்தா என்ன செய்யுறது. இடுப்பில் அமைதியாய் நான் எப்போதும் உனக்குத் துணை என்பதுபோல் கம்பீரமாக காத்துக்கொண்டிருந்த பிஸ்டலை தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அந்த நெடிய உருவம் மெல்ல மெல்ல நகர்ந்து தங்கள் பக்கம் வருவதைப்பார்த்த எஸ்.ஐ ஆதித்தியாவிற்குள்ளும் பய இருள் மெல்ல படர ஆரம்பித்தது. தன் இஸ்ட தெய்வம் முருகனை மனதிற்குள் வணங்கிக் கொண்டார்.

அவர் அப்பா அடிக்கடி சொல்லும் "பயமில்லாதவனாக நடிப்பது கூட பயத்தை வெல்லும் உபாயம் தான்" என்ற வார்த்தைகளை மனதில் அசைபோட்டுக் கொண்டு மனதை உண்மையிலேயே தைரியப்படுத்திக் கொண்டார். பிறந்த மனிதன் இறப்பது உறுதி என்ற தெளிவு சிறு வயதிலேயே இருந்ததால் வருவது வரட்டும் அந்த உருவத்தை எதிர்கொண்டு ஜெயிக்கலாம் என்று மனதில் துணிந்தார்.

அந்த உருவத்தை கூர்மையாக உற்று நோக்க ஆரம்பித்தார்.

அந்த உருவம் மேலும் மேலும் இருவரையும் நெருங்கியது. சில நேரம் இடது பக்கமும் வலது பக்கமும் சென்று வருவது போல் இருந்தது. பைக்கை திருப்பிக்கொண்டு வந்த வழியோ விரைவாக திரும்பி விடலாமா என்று ஆசையையும் ஒருவேளை அந்த உருவம் பைக்கைவிட வேகமாக நம்மைப்பின் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தடுத்து நிறுத்தியது.

இனம் புரியாத உணர்வோடு செய்வதறியாத நிலையில் உடலெங்கும் வியர்த்து வியர்வையாறு கொட்டியது. பயத்தில் மூர்ச்சையான இராஜவேல் மெல்ல கண்விழித்தவர் அந்த உருவத்தை மிக அருகில் பார்க்க நேர்ந்ததால் மீண்டும் சின்ன முனகலோடு மூர்ச்சையாகி ஆதித்யாவின் முதுகில் சாய்ந்தார்.

ஆதித்யா இடுப்பிலிருந்து பிஸ்டலை உருவி காக் செய்து துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டார். வருவது வரட்டும் என்ற துணிவோடு அந்த உருவத்தை அங்குலம் அங்குலமாக ஆராய ஆரம்பித்தார். சுமார் முப்பது அடி உயர கரிய ஒளி ஊடுருவம் தன்மையுள்ள உடல் பருத்து பனைபோல காட்சி தந்தது. தலை என்று எதுவும் தனியாக தெரிய வில்லை. உடலின் உச்சியிலிருந்து சுமார் ஐந்தடி கீழே அகல விரித்த பருத்த கைகள். வாவா என்று அவரை அழைப்பது போலவே அவருக்கு தோன்றியது. கைகழுக்கு கீழே கால்கள் இரண்டாக இல்லாமல் ஒரே தூண்போல இருந்தது. கால்களும் தரையில் தொட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அந்த உருவம் மேலும் மேலும் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆதித்யாவின் பயம் முழுவதும் வடிந்து போய் இப்போது வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் மேலோங்கியிருந்தது. தன் தைரியத்தைப் பற்றி தனக்குள்ளேயே உருவகப்படுத்திக் கொண்டார் ஆதித்யா "அணையப்போகும் விளக்கின் கடைசி பிரகாசமாக இருக்குமோ" என்று.

முதுகில் சாய்ந்திருந்த இராஜவேல் இடது புறமாக சரிவது போல் இருந்தது. அந்த இக்கட்டான நிலையிலும் அவர் கீழை விழுந்து விடக்கூடாது என்பதற்காக பைக்கில் இருந்தபடியே பின் பக்கம் திரும்பி இராஜவேலுவை தூக்கி நிமிர்த்து வைத்து விட்டு திரும்பியவருக்கு தனக்கு பின்னால் இருந்த மரத்தில் தெரிந்த காட்சி மனதில் புது தெம்பை ஊட்ட உற்சாகமாக முன்பக்கம் திரும்பினார்.

அந்த உற்சாக மிகுதியோடு பிஸ்டலை இடுப்பில் செருகிக்கொண்டு அந்த உருவத்தை மீண்டும் கவனமாக உற்றுநோக்கிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இராஜவேலுவை எழுப்ப நினைத்தவர் அவரை எழுப்பாமலேயே மனதிற்குள் நினைத்துக்கொண்டார் ஒருவேளை எழுந்தால் மீண்டும் மூர்ச்சையாக கூடும் என்று அதனால் தன் இருப்பிலிருந்த பெல்டை கழட்டி அதை தளர்த்தி இராஜவேலுவையும் தன்னையும் ஒரே பெல்டினால் இராஜவேல் கீழே விழாதவாறு பிணைத்துக் கொண்டு அந்த உருவத்தைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு புல்லட்டை காவல் நிலையம் நோக்கி நிதானமாக செலுத்தினார்.

மறுநாள் காலை 7.00 மணி ரோல் கால். எஸ்.ஐ ஆதித்யா கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்திருக்க இராஜவேலுவும் மற்ற காவலர்களும் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்தனர் அன்றைய தங்களது டூட்டியைத் தெரிந்து கொள்வதற்காக.

இராஜவேலு மனதில் அன்றைய டூட்டியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைவிட எஸ்.ஐ-யும் தானும் இன்று எப்படி உயிரோடு இருக்கின்றோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலே அதிகமாக இருந்தது. நேற்றைய சம்பவத்தை இராஜவேலு ஏற்கனவே மற்ற காவலர்களிடமும் சொல்லி இருந்ததால் அவர்களும் ஆவலாகவே இருந்தனர்.

இராஜவேலு தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டே விட்டார். "அய்யா, அந்த பேய்கிட்ட இருந்து நீங்களும் தப்பிச்சி என்னையும் எப்படிங்கய்யா காப்பாத்திகிட்டு வந்தீங்க….".

ஆதித்யா தனக்குள் நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டு சுற்றி நின்ற காவலர்களின் முகத்தை ஒருமுறை நோட்டம் விட்டார்.

"அது ஒண்ணும் பேய் இல்லைங்க…நம்மோட பிரமைபும் பயத்தின் வெளிப்பாடும் கலந்து தான் அது நமக்கு பேயா தெரிச்சிருக்கு…எனக்கும் தான்…மற்றப்படி அங்க பேயும் இல்ல பிசாசும் இல்ல…"

"அய்யா, நீங்களும் நானும் தான் கண்கூடாக பார்த்தோமே அந்த பேயை. அப்புறமா எப்படி அது பேய் இல்லைண்ணு சொல்லுரீங்க. அப்ப நான் பார்த்தது பொய்யா…" , என்றார் இராஜவேலு.

"இராஜவேலு நாம ஒரு உருவத்தைப் பார்த்தது உண்மை தான். ஆனா அந்த உருவம் பேயா இருக்க வேண்டிய அவசியம் இல்லையே… நிறைய பேரு இப்படித்தான் ஏதாவது உருவத்தைப்பார்த்து பேய்யிண்ணு நினைச்சி பயந்துகிட்டு மற்றவங்களையும் பேயிருக்குண்ணு பயங்காட்டி பயமுறுத்தி வச்சிடராங்க. உண்மையில உலகத்துல பேயும் இல்ல, பிசாசும் இல்ல எல்லாம் நம் பயத்தின் பிரதிபலிப்பும் பிரம்மையும்தான்".

"அய்யா, அப்ப உங்க வார்த்தைப்படியே நாம நேற்று பார்த்தது பேயில்லண்ணு ஒத்துக்கிறேன். அப்ப நாம பார்த்த அந்த பனை மரத்தளவு உயரமான உருவம் யாரு அல்லது என்னது".
"அப்படி கேளுங்க சொல்ரேன். உங்க நிழல நீங்க பார்த்து இருக்கிங்களா?…. பார்த்து இருப்பீங்க. காலைல பார்த்தா எப்படி இருக்கும் உங்க நிழல்?. நீட்டமா நெடு நெடுண்ணு இருக்கும். மதியம் பார்த்தா எப்படி இருக்கும்? குள்ளமா கட்டையா இருக்கும்…"

இராஜவேலு எஸ்.ஐ பேச்சை இடைமரித்து, "அய்யா, நான் பேயைப்பற்றி பேசிகிட்டு இருக்கேன்…நீங்க என்னண்ணா என் நிழலைப்பத்தி பாடம் நடத்திட்டு இருக்கீங்க… அய்யா அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடாதீங்க", என்றார்.

எஸ்.ஐ சுற்றி நின்ற காவலர்களை ஒருமுறை நோட்டம் விட்டார். எல்லோரின் மனதிலும் இராஜவேலுவின் மனநிலையே ஓடிக்கொண்டிருந்ததை அவர் போலீஸ் பயிற்சின் போது படித்த மனோதத்துத்தின் பயனாய் சிரிதேனும் கணிக்க முடிந்தது.

"இராஜவேலு, அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் தொடர்பு இருக்கா இல்லையாண்ணு எனக்கு தெரியாது. ஆனா நம்மள எல்லாம் பயமுறுத்திகிட்டு இருக்கிற இந்த பேய் சமாச்சாரத்திற்கும் இந்த நிழலுக்கும் ரெம்பவே தொடர்பு இருக்கு".

ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும், "எனக்கு கிடைத்த அனுபவத்தை வச்சு சொல்லணும்னா எல்லாருமே நிழலைப்பார்த்து தான் பேய்ண்ணு தப்பா நினைச்சிக்கிட்டு பயந்து உயிரை விடராங்க பொழைச்சவங்க மத்தவங்கள பயத்துல சாகடிக்கிறாங்க…".

"நான் கூட நேற்று இராத்திரி அந்த உருவத்த பேய்தானோண்ணு நினைக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனால் வண்டியில மயக்கமா இருந்த இராஜவேலுவ சரியா நிமிர்த்தி வைக்க திரும்பினப்பத்தான் உண்மைய புரிஞ்சு கிட்டேன். நானும் இராஜவேலுவும் அதுவரை பார்த்த உருவம் பேயில்ல நிழல்னு…" , ஆதித்யா சற்று நிறுத்தினார் தன் பேச்சை.

அதற்குள் இராஜவேலுவும் மற்ற காவலர்களும், "அய்யா, அது எப்படிங்கய்யா நிழலா இருக்க முடியும்?", என்றனர்.

"அது ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்ல. அந்த சுடுகாட்டுக்கும் வடக்கு பக்கமா ரோட்டுல இருக்குற மின்சார கம்பத்த எல்லாரும் பார்த்து இருப்பீங்க…".

எல்லோரும் ஆதித்யா சொல்வதை ஆமோதிப்பது போல் கோரசாக ஆமாம் போட்டனர்.

"ரோட்டுல அந்த மின்கம்பிக்கும் வடக்குப் பக்கம் தாழ்வான பகுதி. அங்க இருந்து காரோ, லாரியோ அல்லது பைக்கோ வந்ததுண்ணா அது நமக்கு தூரத்துல வரும் போது தெரியாது. ஆனால் அந்த வாகனங்களின் ஹெட்லைட்ல இருந்து வர்ர ஒளி அந்த மின்கம்பத்துல படுறதுனால மின்கம்பத்தின் பிம்பம் பெரிசா தெற்குப் புறமாக உள்ள மரத்தில் அல்லது வேறு இடத்தில தெரியும். மற்றபடி அது வித்தியாசமா சாதாரண நாட்கள்ல தெரியிறது இல்ல. ஆனா அந்த சுடுகாட்டுல பிணம் எரியுற நாட்கள்ல மட்டும் பிணம் எரிகிறபோது வரும் புகைக்கு நடுவே அந்த நிழல் தெரியும் போது ஆஜானு பாகுவான உருவமா தெரியுது. வாகனம் நெருங்கி வரவர உருவமும் அசைந்து அசைந்து முன்னால வந்த மாதிரி தெரியுது. வாகனம் மேடான பகுதிக்கு வரும் போது உருவம் மறைந்தும் போகுது. அதப்பாக்கிறவங்களும் அது பேய்தான்னு தப்பா புரிஞ்சிக்கிறாங்க. அப்படித்தான் நம்ம இராஜவேலுவும் முதல் முறையா அந்த உருவத்த பார்த்த போது அது பேயிண்ணு நினைச்சி பயந்தது. மேலும் பக்கத்துல அந்த நேரம் லாரி வந்ததால அந்த உருவம் மறைந்து போனதாக சொன்னது. இப்பப் புரியுதா அந்த இடத்தில பேய் எப்படி வந்ததுண்ணு?…"

எஸ்.ஐ. ஆதியின் அறிவுப்பூர்வமான விளக்கம் பேயைப்பற்றிய அவர்களது தவறான கண்ணோட்டத்திற்கு விடை கூறுவது போல் இருந்தது.

இராஜவேலுவிடம் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. தான் பார்த்தது பேயில்லையென்று!….

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP