மூன்றாவது மனிதர்களின் உலகம்

Saturday, May 15, 2010

முதலாவது மனிதர் உள்ளே வந்தார்.
வாசலில் மாட்டியிருந்த அறிவித்தல் பலகையை அவர் படிக்கவில்லை.அவர்உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம்.பிரச்சினைகளில் மனம்மூழ்கிப்போய்,கவனிக்காதுவிட்டிருக்கலாம்.வாசிக்கத்தெரியாதவராக இருக்கலாம்
'' ஐயா இந்த நேரம் நீங்கள் நோயாளிகளைப்பார்க்க இயலாது. மத்தியானம் 12 க்குப்பிறகுதான் பார்க்கலாம். எழுதிப்போட்டிருக்கிறோம், பார்க்கவில்லையா'' குரலில் கனிவு சொட்டியது
''சொறி நான் கவனிக்கவில்லை''
''போய்ப் பிறகு வாங்கோ''
''  சரி '' அவர் போய்விட்டார்.
    அவர் போய்ச் சிறிது நேரத்தில் அடுத்தவர் வந்தார்.
''இது பார்க்கிற நேரமில்லை. எழுதிப்போட்டிருக்கிறது.''

''நான்''.. என்று வந்தவர் இழுக்க

''போய்ப்பிறகு வாங்கோ''
இந்தமுறை பேச்சில் கொஞ்சம்  இறுக்கம் வந்திருந்தது.
 இரண்டாவது மனிதர் வெளியேறிவிட்டார்.

 சிறிது நேரந்தான். மூன்றாவது மனிதர் உள்ளே வந்தார்.

'' ஏனையா அறிவிருக்கா? வெளியில் எழுதிப்போட்டிருக்கிறதை படியுங்கோவன் வந்து வந்து கழுத்தறுங்கிறீர்கள்'' வெடித்தார் அதிகாரி.
வந்தவர் திகைத்துப்போய் வெளியேறினார்.
அவர் மூன்றாவது மனிதர்.
மூன்றாவது மனிதர்கள் எப்போதும் இப்படித்துன்பப்படுகிறார்கள்.

சாதாரணமாய் மூன்றாவது மனிதர் எனும்போது வேற்று ஆள் என்று பொருள் படும்.அதாவது நான்,நீ, அவனில் வருகிற அவன்.எங்களுக்குள் ஏன் ஒரு மூன்றாமாளை இழுப்பான் என்பார்களே அதுவல்ல இந்த மூன்றாவது மனிதர்.மூன்றாவதாய் வருபவர்.
ஆனால் முதலாவதாய் இருக்கவேண்டியவர்கள் மூன்றாவதாய் கருதப்படும் துரதிர்ஷ்டம் எங்கள் நாடுகளில் இருக்கிறது.
மக்களுக்கு பதிலாக அரசியல்வாதிகள் முதலாவதாக கருதப்படுகிறார்கள்.
மாணவர்களிற்காக உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் நிர்வாகம் முதலாவதாக இருக்கிறது.நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் மூன்றாம் நபராக மதிக்கப்படுகிறார்கள்.அது இன்னொரு பார்வை.( நான் அரசியல்வாதி, நீ போலிஸ், அதற்குள் இந்த மூன்றாம் ஆள்... அதுதான் பொதுஜனங்கள் எதற்கு..இப்படி)

இங்கே மேற்படி அதிகாரி முதலாவது இரண்டாவது நபர்களை பொறுமையாகக்கையாளுகிறார்.முதலாவது ஆளின் பக்கமிருந்து கூட யோசித்துப்பார்க்கவும் செய்கிறார்.
இரண்டாவது ஆளில் சலித்துப்போய்விடுகிறார்.
மூன்றாவது மனிதர் மீது கோபங்கொண்டு அவமானப்படுத்தி விடுகிறார்.
அதிகாரியின் பார்வையில் ஒரு தவறு மூன்று முறை நிகழ்கிறது. அது கோபத்தை ஏற்படுத்துகிறது.தவறைப்பார்த்து  வெளிப்படுகிற அவருடைய ஆத்திரம் , ஒரே மனிதர் ஒரு தவறை மீண்டும் செய்கிறபோது ஏற்படுகிற எரிச்சல் போல இங்கு வெளிப்படுகிறது. ஆனால், தவறைச்செய்பவர் புது மனிதர் என்பதை அவர் பார்க்க மறந்து விடுகிறார்.(sensitization) அல்லது எல்லாரும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தி விடுவார்.
அதனால்தான் இப்படி பொதுச்சேவையில் இருப்பவர்கள்
''இந்தச்சனங்களே இப்படித்தான்.'' என்று சொல்லி கடுமையாக நடந்து கொள்வார்கள்.இது பொதுமைப்படுத்தல்(generalization) எனப்படுகிறது.
   அதாவது அந்த எழுதிவைத்த அறிவித்தலைப்பார்த்து 50 பேர் உள்ளே வராமல் இருந்திருப்பார்கள்.ஒரு மூன்று பேர் மீறி உள்ளே வந்திருப்பார்கள்.
அதிகாரி '' கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்கள்'' என்று எல்லோரையும் இழுத்துவிட்டுவிடுவார்.
மறுபக்கத்தில் மூன்றாவது மனிதருக்கு தனக்கு முன்னால் இருவர் போய் வந்தவிடயம் தெரியாது.
" என்ன இந்தாள் இப்படி நாய் மாதிரி பாயுறான். இவங்களே இப்படித்தான், காசைக்காட்டினால் பல்லை இளிப்பாங்கள்''அப்படி என்று யோசிக்கக்கூடும். தாழ்வுமனப்பான்மையுள்ளவராயின் '' "உலகத்திலேயெ என்னைப்பார்த்து ஒருவருமே மதிப்பதில்லை''
என்று மனமுடைந்து போய்விடுவார்.
மேலும் இந்த மூன்றாவது மனிதர்கள் அந்த நிகழ்வை தங்கள் சாதி, இன சமய அடிப்படையில் அர்த்தப்படுத்திக்கொள்ளவும் கூடும்.
இவை பொது அபிப்பராயமாக மாறி சனங்கள் என்றால் இப்படி, அரசு அலுவலர் என்றால் அப்படி என்று ஒரு பொதுக்கருத்தாகவே மாறிவிடுகிறது.(ஊழல் வேறு)

  .
இப்படி பற்றாக்குறை,நெருக்கடி நிறைந்த மருத்துவமனைகள், அலுவலகங்கள்(அரசு),பேருந்துகள்,பிரயாணங்கள் இப்படி எல்லாவிடங்களிலும் இந்த  சக மனிதர்களின் மீதான பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
.இங்கெல்லாம் சேவையை வழங்குபவர்கள் சிலராகவும் பெறுபவர்கள், பெறுவதற்காக காத்திருப்பவர்கள் அனேகமாகவும் இருக்கிறார்கள். இந்தப்பற்றாக்குறையின் விளைவு மேற்படி மூன்றாவது மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதுதான்.
அதாவது எல்லாருடைய தவறுகளின் விளைவும் ,காய்ச்சிய வார்த்தை ஈயங்களாக ஊற்றப்படுகிறது. அவமானங்களும், துன்பங்களும்வெஞ்சினங்களாக ஊற்றெடுக்கின்றன.பற்றாக்குறை நிறைந்த உலகம் பாதிக்கப்படுகிற மூன்றாவது மனிதர்களின் உலகமாகி விடுகிறது.
 
 
அதாவது இவர்கள் இப்படித்தான் இவர்களை இப்படித்தான் நடாத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட உலகம்.
 சாட்டைகளாக நாவைச்சுழற்றி வார்த்தைகளை  வீசிக்கொண்டிருக்கிற மனிதர்களின் உலகம்.

இதற்கு என்ன தீர்வு என்று கேட்டால் பெறுபவரும் கொடுப்பவரும் எதிரிலிருப்பவரை மனிதராக பார்க்கவேண்டும்.
ஆனால் சேவை பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோர் கியூவில் நிற்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் அப்படிச்செய்வதற்கான  சாத்தியம் குறைந்து  பணி இயந்திரத்தனமாக மாறிவிடும் என்பது கண்கூடு.
    பதிலாக கியூவில் காத்துக்கொண்டிருப்பவர் தன்முறைக்கு ஏதாவது குளிர்மையாகப்பேசி வேலைப்பளுவிலிருப்பவரை குளிர்விக்கலாம்.வார்த்தைகள் பொருத்தமாக விழவேண்டும்.
 
இப்படித்தான் ஒருவர் குளிரப்பேசினார்.
" உங்களை மாதிரி திறமையாக வேலை செய்பவரை பார்க்கவில்லை.இவ்வளவு பேரையும் சமாளிக்கிறதென்றால் சும்மாவா''
இதுவரை இறுக்கமாக வேலை செய்தவர் கொஞ்சம் இளகிப்போனார்.
'' இது எங்கட கடமை என்ன செய்யிறது இன்னும் சாப்பிடக்கூட இல்லை''
'' கடவுளே இந்த சனத்துக்கெங்கே விளங்கப்போகுது.ஒரு கூல் ட்ரிங் வாங்கி வந்து தரட்டா''
''வேண்டாம்  உங்களைக்கொண்டு வாங்கிறது சரியில்லை"
''என்ன கதைக்கிறீங்கள்'' இவ்வளவு பேரையும் சமாளிக்கிறீங்கள் ஐந்து பேர் செய்யிற வேலை தனியாச்செய்கிறீர்கள் இது கூடச்செய்யாவிட்டால் நான் மனிசன் இல்லை''
அவர் வேகமாய்ப் போனார் கியூவையும் விலக்கிக்கொண்டு திரும்பி வந்தார்.
'அருகில் ஒரு குளிர் கோலாவை வைத்தார்.இதைக்குடியுங்கோ'' காசைக்கூட வேண்ட மறுத்தார்.
அட இப்படி மனிதர்களா என்று நினைப்பதற்கு முன்னர்,
'' இது என் மச்சானுடைய பைல் இதை முடிச்சுத்தந்தால் நான் வீட்டுக்குப்போய்விடுவேன்'' என்றார் அவர் உரிமையோடு.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP