கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்

Saturday, May 1, 2010

மனிதனுக்கு தாபங்கள் இருக்கலாம். கோபங்கள் இருப்பது சரியா... இது பலரது கேள்வி. காரணம்- அதீத கோபமே பல சிக்கல்களை உற்பத்தி செய்கிறது. சிரிப்பு, அழுகையை போல் கோபமும் ஒரு வித உணர்ச்சி... கோபப் பட வேண்டிய இடத்தில் நாம் கோபப் படாமல் போனால், நாம் கோழையாக அல்லது முட்டாளாக அல்லது வாழவே தகுதி அற்றவனாக அல்லவா அடையாளம் காட்டப்படுவோம்- அதனால் தாபம் இருப்பதை
போல் கோபமும் அவசியமே என்கின்றனர்.

அது சரியாகவும் கூட இருக்கலாம்... ஏன் எனில் கோபம் குறித்து, அங்கங்கே நல்ல பொன்மொழிகளும் உள்ளன. "கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்" என்பதும் சான்றோர் வாக்கு.

கோபத்தில் பல வகைகள் உள்ளன. பொய் கோபம் ,நிஜக் கோபம்... நியாயமான கோபம், நியாயமற்ற கோபம்... தேவையான கோபம், தேவையற்ற கோபம்... என்று கோபங்கள் பல வகையாக விரிகிறது. கோபக்காரனாக இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன. யாரும் அவரிடத்தில் கடன் கேட்க மாட்டார்கள். அவரை பார்த்து பலரும் அச்சப் படுவார்கள். யாரும் அவரை ஏமாற்ற நினைக்க மாட்டார்கள். நிச்சயம் பிறரால் ஒரு வட்டத்துக்குள்ளேயே வைக்கப் படுவார்.

ஆனால், அதே நேரம் சில பாதகங்களும் உள்ளது. மனைவி கூட கோபக்காரனை காதலிக்க யோசிப்பாள். யாரும் அவருக்கும் உதவ மாட்டார்கள். "கொடுத்து கெட்ட பேரு வாங்கறதுக்கு, கொடுக்காம்ம கெட்ட பேரை வாங்கிக்கலாம் " என்று ஒதுங்கி கொள்வார்கள். மரியாதை சில நேரம், மண்ணை கவ்வும்.

கோபங்களிலேயே சிறந்த கோபம் என்று ஒன்று உள்ளது. ஆச்சர்யமாக உள்ளதா... அது தான் நியாயமான கோபம்... கோபப்பட வேண்டிய இடத்தில் பட வேண்டிய கோபம். இந்த கோபத்திற்கு தனி மரியாதையும் உண்டு. கோபமே படாத ஒருவன், கோபமே படத் தெரியாத ஒருவன், கோபப்படுகிறான் என்றால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது என்று அந்த கோபம் பிறரால் கவனிக்கப்படுகிறது. பிறரால் கவனிக்கப் படும் கோபம் சரித்திரப் புகழை பெறும்.

சமுக அவலங்களை கண்டு பெரியார் அடைந்த கோபம், பல கதவுகள் திறக்க காரணமானது இல்லையா. நம் கோபம், நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் நல்லது செய்ய வேண்டும். எந் நேரமும் கோபப்படும் ஒருவனின் கோபம், எவராலும் ஏற்று கொள்ளப் படுவதே இல்லை. "இவனுக்கு வேற வேலையே இல்ல" என்கிற விமர்சனம் தான் மிச்சமாகும். கவனிக்கவே படாத கோபத்தால், யாருக்கென்ன நன்மை விளையும்.

கோபம் எதன் அடிப்படையில் வருகிறது... எதன் அடிப்படையில் வரலாம்... எதிர்பார்த்த ஒன்று- கிடைக்காமல் போகும் போது, அந்த ஏமாற்றம் கோபமாய் மலர்கிறது. தான் சொல்வதை, பிறர் கேட்காமல் போகும் போதும்- கோபம் மலர்கிறது. இன்னும், இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது- கோபம் வர.

இரண்டு பேர் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஒரே விதமான சம்பவம் அல்லது ஒரே விதமான ஏமாற்றம், தோல்வி ஏற்படுகிறது. ஒருவர் கோபப்படுகிறார். மற்றவர் நிகழ்வுகளை கோபப் படாமல் ஆராய்கிறார். தன் தோல்விக்கு, பிறர் காரணமாகும் போது, வரும் கோபம் நியாயமானது. நம் தோல்விக்கு நாமே காரணமாகி, அதற்கும் அதே கோபப்பட்டால், இந்த கோபத்தை என்னவென்று சொல்வது.

வயது வித்தியாசம் பாராமல், எல்லோராலும் வெறுக்கப்படுவது- பிறர் காட்டும் கோபத்தையே. அதே போல் எல்லோராலும் விரும்பப்படுவது- தாம் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அவ்வாறு இருக்க முடியாது போவதே சோகம். கோபத்தின் ஒரு பகுதி, பிறராலேயே ஏற்படுத்தப் படுகின்றது அல்லது தூண்டப்படுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்த கோப விஷயத்தில், எனக்கு இரண்டு முகங்கள் உள்ளன. நிறைய பேருக்கும் இதே அனுபவம் இருக்கலாம். "எப்படிங்க கோபப்படாம்ம இருக்கீங்க. ரெம்ப பொறுமை சார்- நீங்க" என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். அதே என்னிடம் வேறு சிலர், "ஏங்க இப்படி எரிஞ்சு, எரிஞ்சு விழுறிங்க. உங்களுக்கு பொறுமையாவே பேச தெரியாதா" என்றும் கேட்பார்கள். அப்படியெனில் எது "நாம்". இரண்டுமே நாம் தான். நமது இரண்டு குணாதிசயத்தையுமே- நம்மை சுற்றி உள்ளவர்களே உருவாக்குகிறார்கள் அல்லது தீர்மானிக்கிறார்கள்.
 
இரண்டு பேர்- ஒரே கேள்வியை கேட்கிறார்கள். ஒருவருக்கு கோபம் படாமல் பதில் சொல்கிறோம். மற்றவர்களுக்கு கோபமாய் சொல்கிறோம். ஏன் இந்த பாகுபாடு. கேள்வி கேட்கும் முறை. பதிலை உள்வாங்கும் முறை... அவ்வளவே. எப்படி நமக்கும், நம் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கும் சற்றும் தொடர்பு இல்லையோ- அப்படித்தான் சில நேரம்-
நமக்கும், நமது கோபத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையை நாம் அடைகிறோம்... அவ்வளவே.

"கோபத்தை கட்டுப்படுத்துங்க" என்று நண்பனாக சொன்னால்- யாரும், ஒரு போதும் ஏற்று கொள்வதில்லை. அதே நேரம் மருத்துவர். "டென்ஷனை குறைங்க" என்றால் கேட்டு விடுகிறோம். கோபம், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையையும் திசை திருப்பக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. ஆனால் அது பல நேரம், மோசமான திசைக்கு தள்ளக் கூடிய திசை காட்டியாகவே உள்ளது என்பதே வருத்தத்திற்குரிய செய்தி.

கோபம், நிச்சயம் குடும்ப வாழ்க்கைக்கு எதிரி. கோபக்காரர்களின் துணைகள்," கோபத்தின் காரணமாகவே, விவாகரத்து கோருவது" யதார்த்தமான உண்மைதானே.

"கோபப்பட்டு- இந்த உலகத்துல் சாதிக்கப் போறது ஒண்ணுமே இல்ல" என்று பாமரர்கள் மிக எளிமையாக, ஆணித்தரமாக சொல்ல கேட்டு இருக்கிறோம். இன்று பல நோய்களை பெற்றெடுப்பது கோபங்களே... அதனால் கோபங்களை கட்டுபடுத்த- மனிதர்கள் தேவையற்று கோபமும் பட வேண்டாம். பிறரை கோபப்படுத்தவும் வேண்டாம்.

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP